Wednesday, August 27, 2014

மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமா க்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும்



இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அப்பா அம்மா சாயலில்த்தான் பிறக்கிறது. பேச்சுக் கூட தன் சூழலில் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் பேசிக்கொள்ளும்.
அப்படித்தான் சினிமாவும் யார் இயக்குகிறானோ அவன் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் அந்த படத்தில் இருக்கும்.அப்படி தன் சமுகத்தில் இருக்கும் ஒருவனின் வலியை பதிவு செய்து இருக்கிறார் மதிசுதா.
ஈழத்தில் இருந்து குறும்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தமிழ் நாட்டு காரர்கள் எடுக்கும் வணிக சினிமா போல சிலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மதி சுதா போன்ற சிலர்தான் அவர்களில் சமுகத்தின் சாயலில் படைப்புகளை தருகின்றனர்.
தழும்பு –ஒரு கை,கால்  இயலாத,  சமுகத்தில் வாழ நினைக்கும் முன்னாள் போராளியின் கதை,
படத்தின் முதல் காட்சியே ஒரு கை இயலாதவர் என்ற காட்சிப்படுத்தல் ஊடாக தொடங்குகிறது . இரண்டாவது காட்சியில் யுத்தத்திற்கு பிறகு நம்சமுகத்தின் நிலைமையையும் முன்னாள் போராளிகளை இந்த சமுகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்கிறது.
இப்படி காட்சிகள் மாற முன்னாள் போராளி என்பதால் பயத்தில் உதவி செய்ய மறுக்கும் நண்பனும் , சிகரட் தரவில்லை என்பதற்காக வக்கிலாதவன் என்று கேவலப்படுத்தும் சிறுவனை கோவப்பட்டு அடிப்பதும் , பிறகு சிறுவனின் அப்பா வந்து திட்டும் வார்த்தையும் அதன் பிறகான மனது கனத்த காட்சியில் படம் திரையில் மட்டும் மறைந்து போகும், நம் மனதில் இல்லை.
படத்தில் கொஞ்ச வசனம்தான் ஆனால் ஒவ்வொரு வசனமும் இன்னுமொரு படத்திற்கான கதை சொல்லி விடுகிறது.
உதரணமாக – இயக்கத்தில இருந்து வந்தவருக்கு  சமுகத்திண்ட நிலைப்பாடு விளங்காம இருக்கு.
செத்த சனத்திண்ட காச அடிச்சு கடைய போட்டுடுட்டு ஊர ஏமாத்தி பம்மாத்திய பிளைக்கிறாய், கொலைகார நாயே!
இந்த இரண்டு வசனங்களும் போதும் முன்னாள் போராளிகளை இன்றைய நிலைமையை சொல்ல.
அடுத்து பாலமுரளியின் ஒளிப்பதிவும் மதுரனின் படத்தொகுப்பும் குறைகள் சொல்ல முடியாது, முதல் காட்சியே ஒரு குறடும் சாவியும் இருக்கிற மாதிரி தொடங்கும், அத ஒரு ஒளிப்படமா பார்த்தாக்கூட நல்லா இருக்கும், தேத்தண்ணி குடிக்கிற காட்சி, பொடியன்கள அடிச்ச பிறகு ஒவ்வொரு சைக்கிளா விழுற காட்சி ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது.
சன்சிகன் ஒலிப்பதிவு தர்ஷனன் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்து இருக்கு.
இந்த படத்த பார்க்கும் போது இந்த கதைய எங்கயோ வாசிச்ச மாதிரி இருக்கே எண்டு ஜோசிச்சு கொண்டு இருந்தன். பிறகு படம் முடியும் போது அது நெற்கொழுந்து தாசனின் மூலக்கதையில் இருந்து எடுக்கப்பட்டது என்று போட்டுடாங்க.
அடுத்தது நடிப்பு -அந்த அந்த கதாபாத்திரங்கள் என்ன செய்யுமோ அத நடிச்ச ஆக்கள் செய்து இருகிறாங்க, மதிசுதாவும் அப்படிதான், கை,கால் ஏலாத ஒரு முன்னாள் போராளியாவே இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் மதிசுதா தன்னுடைய வேலைய ஒழுங்கா செய்து இருக்கிறார் என்பதற்கு நான் மேலே சொன்ன காரணங்களே சாட்சி!
நான் மேல நிறைய இடத்தில முன்னாள் போராளி என்ற வார்த்தைய அதிகம் பயன்படுதிட்டன், உண்மை என்ன எண்டா இந்த சமுகத்தில் எப்படி வாழ்வது என்று இன்னும் போராடி கொண்டு இருக்கிறார்கள் இந்த முன்னாள் போராளிகள்!
முக்கியமா இந்த படத்த சமுக வலைதளங்களில் வீரம் பேசும் புலம்பெயர் போலிப் போராளிகளும், தமிழ்நாட்டு காரர்கள் மாதிரி படம் எடுக்க நினைக்கும் ஈழத்து முயல்வோரும் பார்த்தே ஆக வேண்டும்.

1 comment: